×

இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க ₹26.81 கோடிக்கு பச்சரிசி: பள்ளிவாசல்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு ரூ.26.81 கோடி மதிப்புள்ள 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை போலவே, 2024ம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

2024ம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிவாசல்களுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7,040 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 லட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க ₹26.81 கோடிக்கு பச்சரிசி: பள்ளிவாசல்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,CHENNAI ,M. K. Stalin ,Muslims ,Tamil Nadu government ,Holy Ramadan ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...